கருத்தாலே கருத்தெதிர்க்குங் கலையறியார் மன்றேறிக் கயவர் போலே பெருத்தவசை பொழிகின்றார்; பிழைபட்ட செய்திகளைப் பேசு கின்றார்; பொருத்தமிலாப் பொய்ம்மூட்டை பொதுவிடத்தில் அவிழ்க்கின்றார்; புண்ப டுத்தி வருந்திடவே தனிமனித வாழ்க்கையினைத் திறனாய்வர்; வைது தீர்ப்பர் அவைநடுவில் தகாமொழிகள் அருவருப்பைத் தருமொழிகள், அவர்ம னத்திற் சுவையெனவே கொள்மொழிகள், சுடுமொழிகள், இழிமொழிகள், தொகுத்தெ டுத்த *நவைமொழிகள், பயனில்லா நகைமொழிகள் உதிர்ப்பவரால் நன்மை யுண்டோ? இவைதவிர்க்கப் பொதுமக்கள் எழுச்சிகொளின் பொதுமேடை ஏற்றங் காணும். இழிமொழிகள் பழிமொழிகள் எடுத்துரைப்போன் பேசுகிறான் என்றால் நீவிர் குழுமாதீர்; மனம்வெறுத்துக் கூடாமல் ஒதுக்கிவிடின் கொடியர் பேச எழுவாரோ? நன்கொடைகள் ஈயாமல் எள்ளிவிடின் ஏது மேடை? அழிவுதரும் இச்செயலை அழிப்பதற்கு நுமக்கன்றோ அறிவு வேண்டும். நன்மைகளை உருவாக்கும் நாட்டமுடன் வருவோர்க்கு நல்கல் வேண்டும்; புன்மைகளை வளர்ப்பவர்கள் பொறுக்குவதைத் தின்பவர்கள் புகுவா ராகின் தன்மையிலார் இவரென்று தருகொடையை நிறுத்திடுக தரங்கள் கெட்ட புன்செயலுக் குடந்தையெனப் போகாதீர் நல்லுணர்வைப் போற்றி வாழ்க.
*தீய மொழிகள் |