பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே55

‘பட்டினியாற் சாகவிடேன் பாட்டாளி
      இனத்துக்குப் பாலும் வார்ப்பேன்
தட்டழிய விடமாட்டேன் தரமளிக்குங்
      குடியொழிப்பேன் தாய்மே லாணை
அட்டவணைத் திட்டங்கள் ஆயிரத்தின்
      மேலுண்’டென் றறைவர்; வெற்றி
கிட்டியதும் தன்னலமே கிளைத்திருக்கும்
      பொதுநலமோ கெட்டு நிற்கும்

வாக்களிக்கக் கையூட்டு வாங்குகிறோம்
      வெற்றியொடு வந்தோர் பின்னர்
வாக்களித்த நம்மிடமே வட்டியொடு
      கையூட்டு வாங்கு கின்றார்;
ஆக்கமுளார் அமைச்சரென ஆகிவிடின்
      நன்கொடையென் றதன்பேர் மாறும்;
தீர்க்கவொரு வழியில்லை தேர்தலினால்
      விளைகின்ற தீமை யெல்லாம்

எதுசெய்தும் வெற்றிபெற எண்ணுவதால்
      தேர்தலிலே இழிந்த போக்கைப்
புதுமுறையிற் காணுகிறோம்; போடுகிற
      சீட்டுகளும் புகைந்து போகும்
விதிமுறையும் வேறாகும் வேட்பாளர்
      சாதிகளும் வேறாய்த் தோன்றும்
பதிவான சீட்டுகளிற் பலபெயர்கள்
      மாறிவரும் பறந்து போகும்.

கற்றறிந்து சிந்தித்துக் கண்டுணர்ந்து
      செயலாற்றும் கடமை வேண்டும்;
பற்றழிந்த தொண்டுளத்தைப் பண்புளத்தைப்
      பொதுநலத்தைப் பாது காத்தல்
உற்றவர்க்குக் கடமையென உளத்தூய்மை
      முறைமையென உணர்ந்து விட்டால்
பெற்றதொரு விடுதலைக்குப் பெருமைவரும்
      தேர்தலுக்கும் பெருமை யுண்டு