பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே57

சுடுங்கோ லாகும் சொட்டுங் கண்ணீர்!
வெந்துயர் பொறாது சிந்திய விழிநீர்
செந்தழலாகிச் சிதறிப் பரவும்;
சுவைபட முன்பு சொன்னதை மறந்து
புவியர சாள்வோர் புகுத்திய வஞ்சப்
பொல்லாங் கனைத்தும் பொசுக்கும் நசுக்கும்;
நல்லோர் ஆட்சி நாட்டினில் மலர்த்தும்;
அரியணை யமர்வோர் ஆய்ந்துளங் கொள்க;
நெறியறி மாந்தர் அறிவுரை யதனைச்
செவிபுக விடுக; செற்றமுங் கலாமும்
தவிர்க தவிர்க; தந்நலம் விடுக;
கொலையுங் களவும் நிலைபெறல் காணின்
அலைவுறும் எமதுளம் ஆறாது துடிக்கும்
விழிகள் கனன்று வெந்நீர் வடிக்கும்
விழிநீர் வடிப்பும் வெந்துயர்த் துடிப்பும்
அழித்தே அமையும் அதனெதிர் ஒன்றிலை;
விழித்தனர் மாந்தர் விளையாட் டயரேல்;
செருக்கும் தருக்கும் பெருக்கு வீராயின்
நொறுக்கும் அவைநுமை நொடிப்பொழு ததனில்
பொதுநலக் காவலர் பொறுப்பினை ஏற்றவர்
எதுநலம் எனவுணர்ந் தேந்துக கோலே,