போட்டவர் நெஞ்சும் சற்றுப் புதுமையிற் பொருந்தல் வேண்டும் மேட்டுயர் வாழ்க்கை யொன்றே மேன்மையென் றெண்ணல் வேண்டா உடலினை வருத்தி இந்த உலகினைக் காக்கும் மாந்தர் படுதுயர் கண்டும் நெஞ்சிற் பரிவொடும் அணுக லின்றிச் சுடர்தரும் உழைப்பை யெல்லாம் சுரண்டியே வாழ எண்ணின் அடகெடும் வாழ்வை நீங்கள் அடையும்நாள் தொலைவில் இல்லை அடிமுத லாகத் தங்கள் அயர்விலா உழைப்பை வைத்தோர் மிடிபடத் துயரில் வீழ்ந்தால் மேவிடும் புரட்சி திண்ணம்; அடியொடு சுரண்டும் ஆசை அகற்றிடல் வேண்டும்; இந்தப் படியுணர்ந் துரிய பங்கைப் பகிர்ந்தளித் திடுதல் வேண்டும். இணைந்தொரு துறையிற் புக்கோர் இரண்டணி யாகத் தம்முள் *தணந்துளம் பகைமை கொண்டு **தரியல ராதல் கண்டேன் சுணங்கிடும் எனது நெஞ்சிற் சுடுதழல் பெய்தல் போல உணர்ந்துளம் வாடு கின்றேன் இருவர்க்கும் ஒன்று சொல்வேன்
*கணந்து - பிரிந்து, **தரியலர் - பளகவர். |