அத்துயர்தான் மிஞ்சிவரும்; அவனுக்கோ காசுவரும்; ஆக்க நோக்கில் எத்துறையில் ஐயங்கள் எழவேண்டும், அத்துறையில் எழவே யில்லை. நச்சுமிழும் வினாக்களுக்கு நல்லவரா விடையளிப்பர்? நஞ்சு தன்னை எச்சமயம் புகுத்திடலாம் எனப்பார்க்கும் இழிந்தவரே இதனைச் செய்வர்; அச்சமிலார் நாணமிலார் அரிவையர்தம் கதைசொல்லி ஆள்கள் சேர்க்கும் கொச்சைமனங் கொண்டவர்கள் குமுகாயங் கெடுப்பதற்குக் கூச மாட்டார். நடிகையரை ஆய்வதற்கா நாளிதழ்கள்? நாட்டவர்தாம் நடத்து கின்ற கெடுதிகளைத் தெரிவதற்கா கிழமையிதழ்? இளநெஞ்சிற் கீழ்மை யெல்லாம் படியவிடும் நோக்கிற்கா பாழிதழ்கள்? இவைவிடுத்தாற் பயனில் மூடக் கொடுமைவளர் பேரிதழ்கள்! காசுபெற எதுசெயவும் கூச வில்லை அங்கங்கே அறிவியலின் ஆய்வுரைகள். அரசியலை ஆழ்ந்து கற்றோர் எங்கெங்கே என்னென்ன எழுதியுளார்? இலக்கியத்தின் நயங்க ளென்ன? இங்கவற்றைக் தெரிந்துகொள இளைஞரினம் முன்னேற எடுத்து ரைத்தால் எங்களினம் எழுச்சிபெறும் எம்நாடும் ஏற்றமுறும் எந்நாள் அந்நாள்? |