பணியிடை அமர்த்து தற்குப் பணத்தினை யள்ளித் தந்தேன்; மணமகன் வேண்டு மென்றால் மற்றிவை வேண்டும்’ என்பான். பெற்றவன் மகனுக் காகப் பெருந்தொகை செலவு செய்தல் உற்றதோர் கடமை யாகும்; உணர்விலான் ஊரி லுள்ள மற்றவன் தலையிற் கையை வைத்திட நினைந்தாற் பெண்ணைப் பெற்றவன் யாது செய்வான் பித்தனாய் மாற லன்றி? பெண்களைப் பெற்ற தந்தை பெருந்தொகைக் கியலா னாகிப் புண்களை நெஞ்சில் வைத்துப் புழுங்கியே வாடு கின்றான் பெண்களும் மணங்கா ணாராய்ப் பேதலித் தழிந்து போனார்; எண்ணிநல் வழியைக் காண எவனுமே விரும்ப வில்லை. கண்கவர் எழிலைப் பாரான் கல்வியின் பெருமை காணான் பெண்மகள் குணத்தை நோக்கான் பிறவுயர் பண்பும் நோக்கான் உண்மையில் மனப்பொ ருத்தம் உள்ளதா எனவும் எண்ணான் பொன்பொருள் மட்டுந் தானே புன்மகன் நோக்கு கின்றான்! |