பக்கம் எண் :

74கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

29
படிப்பும் நடப்பும்

படைத்துவைத்த நீதிகளுக் கேதடா பஞ்சம்?
படித்தவன்தான் நாணமின்றிச் செய்கிறான் வஞ்சம்
கொடுத்துவைத்த பொருளிருந்தும் ஏனடா பஞ்சம்?
குறுக்குவழி நடப்பதனால் என்னடா மிஞ்சும்?

நடுநிலைமை கொண்டுநட வாழ்க்கையி லென்றார்
நடைவழியில் ஓரமறிந் தேகிடச் சொன்னார்
கெடுவழியே நாடுபவன் மாறி நடந்தான்
கீழ்மகனாய் நல்வழியை மீறி நடந்தான்

பிறர்பொருளைத் தன்பொருள்போற் போற்ற மொழிந்தார்
பேதையிவன் அப்பொருளை மாற்ற நினைந்தான்
எவர்பொருளுந் தன்பொருளே என்று நடந்தான்
எதையுமிவன் ஏப்பமிட வாயைத் திறந்தான்

உள்ளமதில் மாசகற்ற ஓதி யறிந்தான்
உடல்தனையே தூய்மைசெய நாளும் முயன்றான்.
கள்ளவழி தானறிந்து செல்ல நினைந்தான்
கற்றதெலாம் காற்றில்விட உள்ளம் விழைந்தான்

தத்துவங்கள் வித்தகங்ள் கூட்டி யெடுத்தான்
தான்படித்த வித்தைகளைக் காட்டி முடித்தான்
புத்தகங்கள் அத்தனையும் வீசி யெறிந்தான்
புன்மைகளைத் தான்பிடித்தே வாழ நினைந்தான்.