31 உலகம் சிவக்கும் பிறப்பினால் உயர்வு தாழ்வு பித்தினாற் பேசு கின்றார் கருப்பினால் தோற்சி வப்பால் பிளவுகள் காட்டு கின்றார் பொறுக்குமா இன்னும் வையம் என்றுளம் பொங்கி நின்றால் தருக்கினாற் சாற்று கின்றார் சாத்திரம் வகுத்த தென்றே பொருளினால் உயர்ந்த வாழ்வு பூமியிற் பெற்றா ருள்ளார் தெருளிலா மதிய ராகித் தெருவிடை வாழ்வா ருள்ளார் இருளிலே சிலரும் மிக்க ஒளியிலே சிலரும் இங்கே விரிவதேன்? முறையா என்றால் கடவுளின் விதியா மென்பார். பொறுப்பிலார் பேசு கின்ற பொய்ம்மலி சாத்தி ரத்தை, வெறுப்புகள் விளையா வண்ணம் மறைத்திடும் விதியை, உண்மைக் கருத்திலார் கழறி நிற்கும் கற்பனைக் கடவுள் தம்மை நொறுக்கினால் அன்றி நாட்டின் நோய்களே நீங்கா இங்கே. |