பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே81

திறந்தினாற் பொதுமை காணத்
      திறந்தனர் விழியை மக்கள்;
கரப்பினார் சொல்லும் எந்தக்
      கதையையும் நம்ப மாட்டார்

பொறுத்தது போது மென்றே
      பொங்கியே எழுந்து விட்டார்;
கருத்தினில் தெளிவு பெற்றார்
      கண்களில் ஒளியும் பெற்றார்;
மறுப்பவர் பழைய பாட்டை
      மன்றிடைப் படிக்க வந்தால்
ஒறுத்திட அஞ்ச மாட்டார்
      உலகமே சிவப்பாய் மாறும்.

தெய்வத்தின் குரல்தான் என்றால்
      தீயிட்டு வேள்வி செய்வர்
பொய்வைத்த புளுகு மூட்டைப்
      புராணத்தைச் சான்று காட்டின்
நெய்வைத்து நெருப்பு மூட்டித்
      தூள்பட நீறு செய்வர்
மைவைத்த நெஞ்ச மெல்லாம்
      மண்ணொடு மண்ணாய்ப் போகும்
எத்தனை நாள்கள் ஏய்ப்பர்?
      ஏய்ப்பரை நம்பி வந்தோர்
எத்தனை நாள்பொ றுப்பர்,
      இருளிடை உழன்ற மக்கள்,
புத்தொளிப் பொதுமை காட்டிப்
      புறப்படுங் கதிரைக் கண்டார்;
இத்தரை முழுதுஞ் செம்மை
      எழில்நிறங் கொண்டு தோன்றும்.