பூமியிலே மீண்டுமதைப் புதுப்பிக்க முயல்கின்றார் பூணூல் மார்பர்; காமுகர்க்குத் தூதுசெலக் கடைவழியில் நிற்கின்றார் கடவுள் தூதர். ‘பரத்தைமையை நாடாதீர் பரத்தினையே நாடுங்கள் பாவஞ் செய்யேல் அறச்செயலே செய்க’வென அறிவுரைகள் ஆற்றாமல் அதைவி டுத்துப் பரத்தைமைக்குக் கடைதிறப்புச் செய்கின்றார்; பாழ்நரகிற் பதிவு செய்யப் புறப்படவே விருப்பமெனில் போகட்டும் நாமவர்க்குப் புகல்வ தென்ன? கடவுளையும் மனறகளையும் கட்டுரைத்த கதைகளையுங் காட்டிக் காட்டி மடமையிலே வீழ்த்திஎமை மாட்டினத்திற் கீழாக மதித்து வந்தீர் தடமனத்தேம் நீர்விரித்த தந்திரங்கள் தெரியாமல் தாழ்ந்து கெட்டோம் எடுபிடிகள் எனஇனியும் எமைக்கருதின் எரிமலைகள் வெடிக்கக் காண்பீர். தருப்பைப்புல் மந்திரங்கள் தகுதியிலாச் சாத்திரங்கள் தமிழர் நெஞ்சில் வெறுப்பைத்தான் வளர்த்ததலால் வேறொன்றும் செய்யவில்லை; மீண்டும் அந்த நெருப்பைத்தான் வெடிக்கிடங்கிற் கொட்டுகிறீர் விளைவென்னாம்? நினைத்துப் பாரும் பொறுப்புணர்ந்தா பேசுகிறீர் பூசுரரே பொhறுமைக்கும் எல்லை யுண்டு. |