வந்தவொரு சுதந்திரத்தை வாலிபர்கள் நுகர்கின்ற வகைதான் என்னே! இந்தவழி ஏகிடத்தான் என்னவழி? சட்டங்கள் ஏதுஞ் செய்யா. மிதிவண்டி ஏறுபவன் மிடுக்கோடு செல்கின்ற வேகங் காணின் கதிகலங்கும்; முன்னோக்கான் கன்னியரின் பின்னோக்கிக் கண்செ லுத்தும் எதிர்வருவோர் மேல்மோதும் ஏகுகிற வழிவிலகி எங்கோ செல்லும்; மிதியடிதான் இச்செயலை வீழ்த்துமலால் சட்டங்கள் வேலை செய்யா. முச்சந்தி நாற்சந்தி முடுக்குகளிற் கூடுகிற முரட்டுக் காளை எச்சந்தில் எந்நேரம் எவர்வருவார் எனநோக்கி எக்க ளித்தே அச்சங்கள் இல்லாமல் அவர்தம்மை எள்ளிநகைத் தாடல் கண்டோம் இச்செயல்கள் கசையடியால் ஏகுமலால் வேறொன்றால் ஏக மாட்டா. பள்ளிசெலும் சிறுமியரைப் பகற்பொழுதில் இளைஞரினம் பகடி பேசி எள்ளிநகை செய்கின்றார் இதுகண்டு பெற்றோரும் இருக்கின் றாரே! பிள்ளைகளைப் பேணாது பெற்றவரும் இருந்துவிடின் பீழை யன்றோ? முள்ளுமரம் முற்றாது முளையிலதைக் கிள்ளுவதே முதன்மை வேலை. |