பக்கம் எண் :

88கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

பிஞ்சுகளைப் பேணுவதும் பிழைசெய்யின்
      கடிவதுவும் பெற்ற வர்க்கே
எஞ்சலிலாக் கடனாகும் எமக்கென்ன
      என்றவர்தாம் இருப்ப ரானால்
மிஞ்சுவது தீமையன்றோ? மேன்மைநிலை
      விளைந்திடுமோ? வீணிற் பெற்றுக்
கொஞ்சுவது போதாது குடிமக்கள்
      ஆக்குவதும் கொள்கை யாகும்

கோதுக்குட் போகாமல் குமுகாயம்
      மேலோங்கும் குறிக்கோள் கொண்டு,
சாதிக்கோ உறவுக்கோ சார்ந்திருக்குங்
      கட்சிக்கோ தாழ்த லின்றி,
நீதிக்கு மதிப்பளிப்போர் நேர்மைக்கு
      வழிவகுப்போர் நெஞ்சம் உள்ளோர்
வீதிக்கு வீதியொரு குழுவமைத்து
      முயலுவரேல் விளைவு நன்றாம்.