பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே9

மாறிய போக்கினைக் கற்றனரே- உயர்
      மான வுணர்ச்சியைச் செற்றனரே
கூறிய நீதிகள் எவ்வளவோ-அவை
      கூறுவர் மேடையில் அவ்வளவே

தந்நலம் ஒன்றையே தேடுகிறார்- அதைச்
      சட்டமென் றாக்கிட நாடுகிறார்
என்னதான் செய்யினும் நெஞ்சினிலே-முனம்
      ஏற்றுகி றாரவர் வஞ்சனையே
பன்னிய நல்லறம் நீக்கினரே-மனப்
      பண்புகள் யாவையும் போக்கினரே
இந்நிலை கண்டுளம் வாடுகிறேன் அதை
      எற்றித் துவைத்திடப் பாடுகிறேன்.

எங்கெது காணினும் வஞ்சமடா- அதை
      எப்படித் தாங்கிடும் நெஞ்சமடா
இங்கெவர் போக்கிலுங் குற்றமடா-இதை
      எண்ணிடும் போதெலாம் செற்றமடா
எங்கணுங் கீழ்மையைச் சாடிடுவேன்-மனம்
      ஏற்றம் பெறக்கவி பாடிடுவேன்
பொங்குக பண்புகள் பொங்குகவே-நலம்
      பூத்துப் பொலிந்துவி ளங்குகவே

நாயினுங் கீழென வாழ்வதுவோ-திரு
      நாட்டின் பெரும்புகழ் சாய்வதுவோ?
ஈயென எங்கணுந் தோய்வதுவோ?- மனம்
      ஈனத் தனத்தினிற் பாய்வதுவோ?
போயெதிர் காலத்தை நோக்குகிறேன்-மனம்
      புண்பட்டுப் போவதால் தாக்குகிறேன்
வாயினை எப்படி மூடிடுவேன்?-உயர்
      வாய்மையைக் காத்திடப் பாடிடுவேன்