பக்கம் எண் :

10கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

அந்தக் குறிப்பும் அவன்காட்டுஞ் சைகைகளும்
முந்திக் கலந்து முகிழ்த்தனகாண் கூத்தாக;
மற்றொருநாள் மாந்தன் மகிழ்ந்து குதித்துவந்தான்
உற்ற பெருங்களிப்போ உள்ளத்துப் பூரிப்போ
பெற்ற பெரும்பொருளோ பெண்காதற் கூட்டுணர்வோ
எற்றுக்கே ஆடினனோ என்ன நடந்ததுவோ
எப்படியோ ஒருணர்ச்சி இன்னதெனாப் பேருணர்ச்சி
அப்படியே உள்ளோடி ஆவி கலந்தெழுந்து
நாடிநரம் பெல்லாம் நடமாடச் செய்தோடிக்
கூடி மனத்தகத்திற் கூத்தாட்டம் ஆடியது;
கூத்தாடும் அவ்வுணர்ச்சி கூடி நிலைநிற்க
ஆற்றாமல் வாய்திறந்தே ஆர்ப்பரித்துக் கூவிவிட்டான்;
கூவுங் குரல்கேட்டான் கொண்டான் பெருவியப்பு;
கூவினான் மீண்டுங் குரலெடுத்துக் கூவினான்;
கோட்டிற் குயிலொன்று குக்குக்கூ என்றொலிக்கக்
கேட்டான் கிளைக்குயில்போற் கூவினான் வாய்குவித்தே;
ஒட்டி இருகுரலும் ஓரொலியாய்த் தொட்டிசைக்க
விட்டுவிட்டுக் கூவி விளையாடிக் கொண்டிருந்தோன்
கிட்டும் பெருமகிழ்வால் கொட்டினான் கையிரண்டும்
கொட்டினான் கூவினான், கூவினான் கொட்டினான்
கூவுதலுங் கொட்டுதலுங் கூடி இசையென்றும்
மேவிவருந் தாளமென்றும் மேதினியில் பூத்தனகாண்;
எண்ணுங் கருத்தை எடுத்துரைக்க அம்மாந்தன்
கண்ணசைத்தான் கையசைத்தான் காலங் கடந்துவரப்
பையஅவன் நாவசைத்தான்; பாலோ தெளிதேனோ
செய்யஒரு நற்கரும்பின் தீஞ்சாறோ என்னஒரு
சொன்மொழிந்தான் மீண்டுமதைச் சொன்னான், எதனாலோ
பன்முறையும் பன்னிப் பழகினான் அச்சொல்லை;