பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்11

சொல்லிப் பழகுமொழி மெல்லத் தமிழாகி
இல்லைநிகர் என்ன இயலாய்க் கனிந்ததுகாண்;
இவ்வண்ணம் முத்தமிழாய் ஏற்றம் பெறுமொழியை
எவ்வண்ணம் ஏத்திப் புகழ்வோம்நாம்? அம்மொழியில்
கூத்தும் இசையுங் குறிக்கின்ற நூலெங்கே?
ஏத்தும் இயல்நூலில் ஏனையவை தாமெங்கே?
பாழுங் கடல்கோளும் பாவிப் பகைக்குலமும்
சூழுங் கொடுவினையால் சொல்லரிய ஏடுகள்தாம்
காணா தொழிந்தனவே; கண்மூடிக் கொள்கையினால்
மாணாச் செயல்செய்தோம் மற்றும் பலஇழந்தோம்;
ஆடிப் பெருக்கிலிட்டோம் அந்தோ நெருப்பிலிட்டோம்
வேடிக்கை மாந்தர் விளையாட்டை என்னென்போம்!
அஞ்சியஞ்சிச் சாகாமல் ஆளடிமை யாகாமல்
எஞ்சியவை காப்போம் இனி.

கவியரங்கம் - செந்திற் குமார நாடார் கல்லூரி
விருதுநகர்