பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 109

2. ஏடெடுத்தேன் பாட்டெழுத.....

கலிவெண்பா

சூடெடுத்த வெங்கதிரோன் சுட்டெரிக்குங் காரணத்தால்
ஓடடுக்குஞ் சிற்றில் உலைபோலத் துன்புறுத்தத்
தோடுடுத்த பூமலருஞ் சோலைக்குட் புக்கிருந்
தேடெடுத்தேன் பாட்டெழுத, எல்லையிலா எண்ணங்கள்
ஓரா யிரமாகி ஓயாக் கடலலைபோல்
நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின்
றொன்றைஒன்று முந்துவதால் ஒன்றும் புரியாமல்
நின்றிருந்தேன்; பின்னர் நினைவெல்லாம் ஒன்றாகி
மின்னல் ஒளிபோல மேலோங்கும் ஓருணர்ச்சி
என்னுட் பளிச்சிட் டெழுந்து பரந்ததுகாண்;
ஊற்றுப் புனல்போல ஊறிவரும் அவ்வுணர்ச்சி
ஆற்றுப் பெருக்கேபோல் ஆர்த்தெழுந்து மேலோங்க
மண்ணிற் பிறந்த மனநிலையை விட்டொழித்து
விண்ணிற் சிறகடித்து விர்ர்ரென் றெழுவதுபோல்
எங்கும் பறந்தேன்; இணையில்லா இன்பநிலை
பொங்கித் ததும்பப் புதுநறவம் மாந்தி
மயங்கிக் களித்தேன் மனம்மயங்கும் வேளை
வயங்கித் திகழுமெழில் வட்ட முழுமதியம்
ஆடிச் சிரிக்கும் அழகிகழைக் கூத்தியைப்போல்
பாடித் தெருவலையும் பாடகியைப் போல்விளங்கக்,
கோலக் கருவானங் கூத்தன் விரித்துவைத்த
நீலத் துகில்போல நின்றங்குக் காட்சிதரக்,
கண்டு களித்தோர் கையால் விசிறிவிட்ட
மண்டுவெள்ளிக் காசுகள்போல் வான்வெள்ளிக் கூட்டங்கள்