பக்கம் எண் :

116கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

4. பகடைக் காய்

ஏட்டளவில் பாட்டெழுதிப் புகழ்ச்சி சொல்லி
      ஏற்றமெலாம் எடுத்துரைத்து வியந்து கூறிக்
காட்டுகிறோம் உழவன்றன் பெருமை எல்லாம்;
      கண்கட்டு வித்தையினால் கால மெல்லாம்
ஒட்டுகிறோம் கற்பனையில் உலவு கின்றோம்
      உண்மையினைத் திரையிட்டு மூடு கின்றோம்;
வாட்டமுடன் அவன்வாழுங் குடிலுக் குள்ளே
      வளர்துயரைத் துடைப்பதற்கு மறந்து விட்டோம்.

உழுகின்றான் விதைக்கின்றான் நீரைப் பாய்ச்சி
      உழைக்கின்றான் காக்கின்றான் ஆனால் நாளும்
அழுகின்றான் உணவின்றி; பெற்ற மக்கள்
      அலைகின்றார் என்புருவில்; பேசாத் தெய்வம்
தொழுகின்றோம் முப்பொழுதும்; பேசுந் தெய்வம்
      துணியின்றி உணவின்றிக் கந்தல் கட்டிப்
பழுதுண்ட சிலைகளெனத் திரியக் கண்டோம்;
      பாடுகின்றோம் அவன்பெருமை என்னே விந்தை!

உழுகின்ற காளைக்கு வைக்கோ லேனும்
      ஒருசிறிது கிடைத்து விடும்; வாழ்நா ளெல்லாம்
உழுதொழிலில் கழிக்கின்றோன் கணக்குப் பார்த்தால்
      உழக்கேனும் மிஞ்சாதென் றுலகஞ் சொல்லும்
பழமொழியைக் கேட்டதினிப் போதும் போதும்
      பாரிலவன் வாழ்வினையும் பெருக்கல் வேண்டும்
முழுமையொடு வாழவழி வகுத்தல் வேண்டும்
      முயலாது கழித்தலினி வேண்டா வேண்டா