பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 117

கைகட்டி உலகந்தான் உழவன் பின்னே
      கடுகிவரும் எனவுரைத்தோம் நன்று நன்று;
கைகட்டி வாய்பொத்தி உண்மை வாழ்வில்
      கால்வளைத்து நிற்பவன்யார்? உழவன் அன்றோ?
பொய்கட்டி விடுவதெலாம் போதும் போதும்;
      புலையனென அவன்வாழ்வைப் பொசுக்கு கின்றோம்;
மெய்தொட்டுப் பயிலஇனும் கூசு கின்றோம்
      மேலென்றுங் கீழென்றும் பேசு கின்றோம்.

ஏர்தொட்டுத் தொடிப்புழுதி *கஃசாச் செய்தே
      எருவிட்டு நீர்பாய்ச்சிக் காத்து நின்று
பார்கெட்டுப் போகாமல் உலகில் எங்கும்
      பசிப்பிணியை ஒட்டுகிறான் அவன்க ழுத்தைக்
கூர்பட்ட கதிரரிவாள் கொண்டு வெட்டக்
      கூசுகிலோம்; நெஞ்சுருகப் பார்த்த கண்கள்
நீர்சொட்ட அவன்வாழுங் குடிலை யெல்லாம்
      நெருப்பூட்டி எழும்புகையில் உலவு கின்றோம்.

அரசியலை அரங்காக்கிச் சூதும் வாதும்
      ஆடுகின்ற பேர்வழிகள் உழவன் றன்னை
உரியஒரு காயாக்கி உருட்டு கின்றார்
      உணராமல் அவ்வுழவன் உருளு கின்றான்
உருளுமவன் ஒருபயனுங் கண்ட தில்லை;
      உருட்டுபவர் போரேறி மேய்தல் கண்டோம்;
அரசியலும் அவனுழைப்பை உறிஞ்சி வாழும்
      அட்டையென மாறியது கெட்ட காலம்!

வீழ்கின்ற புனலனைத்தும் உரிமை யாக்கி
      விலைகொடுத்துத் தனியுடைமை என்ப துண்டா?
சூழ்கின்ற காற்றதனைச் சுடுநெ ருப்பைச்
      சொத்துடையார் தனியுடைமை ஆக்க லுண்டா?
பாழ்வெளியாம் வானத்தைப் பாரி லெங்கும்
      பணங்கொடுத்துத் தனியுடைமை செய்த துண்டா?
வாழ்பூதம் அய்ந்தனுளும் நிலத்தை மட்டும்
      வன்புடையார் தனியுடைமை செய்த தேனோ?

(கவியரங்கம் செய்யாறு, 17.1.1969)


* கஃசு = காற்பலம்