இவ்வண்ணம் தமிழ்காக்க முனைவோர் தம்மை இழிமொழிகள் சொலலன்றி ஆட்சி செய்வோர் செய்வண்ணம் அறியாராய்ப் புலம்பு கின்றார்; ‘தேர்தலிலே நாற்காலி பற்று தற்கே இவ்வண்ணம் தமிழ்தமிழென் றியம்பு கின்றார்’ என்றுரைப்பர் நாற்காலிப் புத்தி கொண்டோர்; உய்வண்ணம் அவர்க்குரைக்க வல்லார் யாரோ? உரைத்தாலும் கேட்கின்ற நல்லார் யாரோ? எப்படியோ அரசிருக்கை கிடைத்து விட்டால் எடுபிடிகள் ஆளம்பும் அமைந்துவிட்டால் அப்படியே ஒட்டிக் கொண்டகல மாட்டார், அடுக்கடுக்காய்ப் பழிவரினும் இறங்க மாட்டார், எப்பொழுதோ ஒருநாளில் வெறுத்தாற் போல இப்பதவி வேண்டேனென் றெழுந்து நிற்பர், அப்பொழுதே மீண்டுமதில் அமர்ந்து கொள்வர், அவர்நம்மை எள்ளிஉரை யாடு கின்றார். காலந்தான் இவர்தம்மைத் திருத்த வேண்டும் கடுகிவரும் அணுகிவரும் தேர்தல் என்னுங் காலந்தான் இவர்க்கறிவு புகட்ட வேண்டும்; கண்திறந்து தமிழரென உணர்வர் அந்நாள்; ஞாலந்தான் இவர்க்குரிமைச் சொத்தா என்ன? நமக்குமதில் உரிமையிலை என்றா எண்ணம்? கோலந்தான் கலையாதோ ? இவர்கள் செய்யும் கொட்டந்தான் அடங்காதோ? அடங்கும் நாளை! |