பக்கம் எண் :

14கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

ஈன்றெடுத்த தாய்மொழிக்கு வாழ்வு வேண்டி
      எடுத்துரைக்க முனைந்ததுமோர் குற்றம் ஆமோ?
ஆன்றவிந்த கொள்கையினார் தமிழ்மொ ழிக்கே
      அரசுரிமை வேண்டியதும் குற்றம் ஆமோ?
ஏன்புகுந்தார் சிறைக்கூடம் ? ஆசா னாக
      இருந்தசிலர் பதவியையும் ஏனி ழந்தார்?
நான்றுணிந்து கூறிடுவேன் பதவி என்ன
      நற்றமிழின் உயர்ந்ததுவோ சீசீ தூசி

மாநிலத்து மொழிகாணாப் புதுமை கண்டு
      வகைப்படுத்தி அகம்புறமாப் பொருளைச் சொல்லித்
தேனிகர்த்த சுவைப்பாவால் பத்துப் பாட்டும்
      தித்திக்கும் தொகைஎட்டும் பாடி வைத்த
பாநலத்தைப், பொருள்வளத்தை, நுகர்ந்த உள்ளம்
      பணியாது; பெருமிதத்தால் நிமிர்ந்து நிற்கும்;
கானகத்துப் புலிப்போத்தாய் வீரங் காட்டும்;
      கவிதைக்கு விளைநிலமாய்க் காட்சி நல்கும்.

கண்ணகிக்கு வரப்போகும் இடர்நி னைந்து
      கண்ணீரை நிறைத்துடலம் தோன்றா வண்ணம்
வண்ணமலர் பலகொண்டு மறைத்துச் சென்றாள்
      வையையெனும் குலக்கொடிஎன் றிளங்கோ சொல்வர்;
அண்ணலெனும் இலக்குவனார்க் குற்ற துன்ப
      *அவலநிலை கண்டுள்ளம் நொந்து நொந்து
மண்மிசையே வரஅஞ்சி மணலுட் புக்கு
      மறைந்துகொண்டாள் அவளென்று நான்பு கல்வேன்;


*பேராசிரியர் இலக்குவனார் பதவிநீக்கம் செய்யப்பட்ட அவலம்