பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்15

சிறைசெல்லப் புலவர்சிலர் வேண்டும் இன்று;
      செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று
முறைசெய்யப் பதவிதனை இழப்ப தற்கும்
      முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டு மின்று;
குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க்
      குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும்;
நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள்
      நிற்குமுதற் புலவன்நான் ஆக வேண்டும்;

பிறந்தநிலம் ஒன்றுண்டு வணங்கல் வேண்டும்
      பேசுமொழி ஒன்றுண்டு போற்றல் வேண்டும்
சிறந்தபொருள் இவற்றின்மேல் ஒன்றும் இல்லை
      சிந்தித்தே இவைகாக்க முனைவோம் வாரீர்!
கரந்துவரும் பகையுண்டு நினைவிற் கொள்க!
      காலமெலாம் அடிமைசெய விழைதல் வேண்டா!
இறந்தபினும் தலைமுறைகள் நம்மை வாழ்த்த
      ஏற்றசெயல் ஈதொன்றே காப்போம் வாரீர்!

கவியரங்கம் - எழுத்தாளர் மன்றம்
மதுரை