16 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
4. கனன்றெழுக! இந்தியினால் விளைதீமை யாவை என்றே இயன்மொழிகள் கற்றுணர்ந்த புலவர் சொன்னார்; சிந்தனையாற் கல்வியினால் தந்நே ரில்லாச் சீர்மைமிகு பேரறிஞர் விளக்கந் தந்தார்; முந்திஎழும் உணர்ச்சியினாற் கவிதை வேந்தர் முழுமூச்சில் எதிர்ப்புரைத்தார்; நேர்மை பேணும் புந்தியினார் அரசியலில் வல்லார் யாரும் புகன்றவெலாம் ஆள்வோர்க்குக் கேட்க வில்லை செவியிருந்துங் கேளாராய் ஆகி விட்டார்; செப்புகின்ற நல்லவரைப் புறக்க ணித்தார்; புவிமுழுதும் நமக்குத்தான் உரிமை யென்ற போக்கினிலே போகின்றார்; நாளை யிங்குக் குவிகின்ற உணர்ச்சிக்கு விடைஎன் சொல்வார்? கூண்டோடு பலியாவர்; கொடிய ஆட்சி தவிடுபொடி யாகிவிடும்; தமிழைக் காக்கத் தமிழரெலாந் திரண்டெழுந்தால் பகைதூள் ஆகும் நமக்குரிய தாய்மொழிக்கு வந்து விட்ட நலிவகற்ற ஒருமுகமாய் எழுக! மற்றோர் தமக்குரிய மொழிக்கெல்லாம் வரவு கூறித் தலைவணங்கும் அருளினிமேற் போதும் போதும்! சுமக்கின்ற பழிதவிர்க்கத் தொன்று தொட்டுத் தொடர்ந்துவரும் தன்மானம் நிமிர வேண்டும் நமக்கென்ன என்றிருக்கும் பொறைமை நீக்கி நமக்குத்தான் பொறுப்பெனநாம் எழுதல் வேண்டும். |