பக்கம் எண் :

130கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

பசுதந்த சுவைப்பாலைக் கொம்புத் தேனைப்
      பலாதந்த நறுஞ்சுளையைக் கருப்பஞ் சாற்றை
நசைமிகுந்த மாங்கனியை வாழை தந்த
      நற்கனியைப் பாழ்நிலத்திற் கொட்டி விட்டுப்
பசிவந்து திரிகின்ற பேதை யுண்டா?
      பயன்மிகுந்த இளமையினைப் பாழ்ப டுத்தி,
வசைமிகுந்து, நல்லுணர்வைச் சிதற விட்டு,
      வழிதவறிச் செல்லுவதா அறிவின் பாங்கு?

திரும்பிப்பார் உன்னினத்தைப் புகழ்க்குன் றின்மேல்
      தெரிவதைப்பார் அதன்பெருமை; பின்னர் இன்று
விரும்பிப்பார் அவ்வினத்தை; வீழ்ந்து விட்ட
      விளைவைப்பார்; தாழ்ந்துகெட்ட நிலைமை யைப்பார்;
துரும்பைப்பார் அதைப்போலத் தேய்ந்த தைப்பார்;
      தோன்றும்பார் உன்னுளத்தில் ஓரு ணர்ச்சி;
இரும்பைப்பார் அதன்பின்னர்த் தோள்க ளைப்பார்;
      எழுச்சியினால் மலரும்பார் இந்தப் பாரே.

24.11.1980