புதியதொரு விதிசெய்வோம் | 133 |
15. சிறுத்தையே விழித்தெழு தனித்தனிப் பிறந்த தமிழர்தம் நெஞ்சம் இனித்திடும் வகையால் எழிற்றமிழ் மொழியால் தம்பீ தம்பீ என்றொரு தாயின் கும்பியின் பிறப்பெனக் கூறிய குரலெது? நம்பி வந்தவர் நலம்பெற் றுயர்ந்திடத் தென்புகள் தந்து தேற்றிய குரலெது? என்றன் உடன்பிறப் பென்றுனை விளித்து நன்றுரை புகலும் நம்பிக்கைக் குரலெது? பொய்யா உறவால் போற்றிப் போற்றி அய்யா அண்ணாவென் றழைத்திடும் குரலெது? பழகிய உனக்குப் பகரவும் வேண்டுமோ? கழகக் குரலெனக் கண்டனை நீயே! உன்றன் மூச்சால் ஓயா உழைப்பால் நின்றமர் பலப்பல நிகழ்த்திய நெறியால் வழிந்தகண் ணீரால் பொழிந்தசெங் குருதியால் எழுந்தது வளர்ந்ததிவ் வெழில்பெறு கழகம்; நடிப்பால் வளர்ந்ததா கழகம்? கொள்கைப் பிடிப்பால் அன்றோ குன்றென உயர்ந்தது; குன்றினைச் சிதைத்திடும் குறியொடு குருவிகள் கன்றுகள் பகலிற் கனவுகாண் கின்றன; அறப்போர் எத்தனை ஆற்றினை! இதனை மறப்பார் உளரோ? மறுப்பார் உளரோ? உளத்தெழும் உணர்வால் ஒவ்வொரு போரிலும் |