பக்கம் எண் :

144கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

19. தமிழக அரசு

முடியரசர் தமக்குரிய அரசைப் பற்றி
      முத்தமிழ்ப்பா வாணரெல்லாம் புகழ்ந்து பாடக்
கடிநகருள் அரியணையில் வீற்றி ருந்து
      கற்பனையில் திளைத்திருந்த என்னை யிங்குக்
குடியரசைத் தமிழரசைப் பாடு கென்று
      கூறிவிட்டார்; குறைநிறையைத் துணிந்து சொல்ல
முடியரசன் தகுவனென நினைந்தார் போலும்;
      முயல்கின்றேன் குறைகாணின் அதுவும் சொல்வேன்

பண்டையநல் லரசுக்குக் கொடிகள் மூன்று
      பைந்தமிழ்நாட் டரசுக்குக் குறிகள் மூன்று
தொண்டுபுரி செயல்மேவும் ‘கடமை’ ஒன்று
      தூய்மை மிகு கண்ணியமாம் தன்மை ஒன்று
கண்டபடி சிதறாமல் தலைவன் சொல்லைக்
      காக்கின்ற ‘கட்டுப்பா டெ’ன்னும் ஒன்று
தண்டமிழ அரசுக்கு வழிவ குத்த
      *தலைவன்றன் பெயருக்கும் மூன்றெ ழுத்து.

ஒரு மொழியால் உலகாண்டார் பண்டை வேந்தர்
      உறவாடி வருமொழிக்கும் இடம ளித்தார்;
இருமொழியால் உலகாளச் சட்டம் செய்த
      தென்னரசு தமிழரசு; நமது நாட்டின்
கருவிழியாய் உயிர்மொழியாய்த் துறைகள் தோறும்
      காணுமொழி தமிழொன்றாம்; மற்றும் ஒன்று
வருமொழிதான் துணைமொழிதான்; தமிழைத் தாழ்த்த
      வருமொழிக்கிங் கொருநாளும் இடமே யில்லை.


* தலைவன் - பேரறிஞர் அண்ணா