பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 145

காருந்தும் பனிமலையை வெற்றி கொண்டு
      கயல்புலிவில் இலச்சினையைப் பொறித்தார் முன்னோர்;
ஊரெங்கும் நிகழ்ந்தபொதுத் தேர்தல் நாளில்
      உரைகாண முடியாத வெற்றி கண்டு,
பேருந்து வண்டிகளில் குறள்பொ றித்துப்
      பெருநெறியில் குறள்நெறியைக் காட்டுகின்ற
சீருண்டு தமிழகத்தின் அரசுக் கென்றால்
      சிதறுண்டு போனவர்கள் குறையும் சொல்வார்.

பாரெங்கும் படைகொண்டு சென்றார் அன்று
      பண்புடைய தமிழ்கொண்டு செல்வார் இன்று;
பாரெங்கும் பெருவெற்றிக் களிப டைத்தார்
      பண்டிருந்த மூவேந்தர் ஒளிப டைத்தார்;
பாரெங்கும் நானூற்றுத் தமிழ் படைத்துப்
      பைந்தமிழ அரசிங்கே ஒளிப டைக்கும்;
பாரெங்கும் தமிழினத்தின் பண்பைக் காட்டப்
      பரசுதமிழ் மாநாடு நடத்திக் காட்டும்.

மன்னவனை உயிரென்றும், உயிரைத் தாங்க
      மக்களையே உடலென்றும் புறத்திற் சொன்னார்;
அன்னவனை உடலென்றும், உடலில் தங்கும்
      ஆருயிரே மக்களென்றும் சாத்தன் சொன்னான்;
பின்னவனைத் தொடர்ந்து தமிழ்க் கம்பன் பாட்டும்
      பேசுவதை நாமறிவோம்; எனினும் அண்ணா
என்னுமொழி யாலழைக்கும் முதல மைச்சை;
      இவ்வண்ணம் தமிழரசில் உறவு தோன்றும் .