பக்கம் எண் :

146கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

புவிபுரக்க அரசிருக்கை அமர்ந்த முன்னோர்
      பொலிவுமிகும் கவிபலவும் புனைந்து தந்தார்;
*கவிபுரக்கும் சங்கத்தும் தலைமை ஏற்றார்;
      காட்டுதற்குச் சான்றுபல இன்றும் உண்டு;
புவிபரக்க அரசிருக்கை இன்று கொண்டோர்
      புதுமைமிகும் கவிபலவும் புனைந்து தந்தார்;
கவிபரப்பும் அரங்கத்தும் தலைமை ஏற்றார்;
      காலமெலாம் நம்மரபு நிலைத்து நிற்கும்.

அரசோச்சும் மன்றத்தில் அறம்உ ரைக்க
      அவைக்களத்துப் புலவர்பலர் இருந்தார் அந்நாள்;
*அரசாட்சி மன்றத்தில் பெருமை நல்க
      அவைக்களத்துப் புலவரென இல்லை இந்நாள்;
முரசோச்சி ஒலியெழுப்பும் முதல மைச்சே
      முறையோஎன் றுள்நினைந்தேன்; புலவ ரைத்தான்
அரசாட்சி மன்றத்தின் தலைவ ராக
      அமைத்தமையால் குறைசொல்ல வழியும் இல்லை.

மாரிக்கு நிகராகப் பொருளை வாரி
      வழங்கியருள் வள்ளல்பலர் ஆண்டார் அந்நாள்;
ஊருக்கு நலஞ்செய்யும் தொண்டர் இந்நாள்
      ஊராள வந்தமையால் வள்ளல் அல்லர்;
ஆருக்கும் ஈவதற்குச் செல்வர் அல்லர்;
      ஆனாலும் தமிழரசில் எளிய வர்க்குப்
பாரிக்கு நிகராக வாழ்வு நல்கும்
      பண்பாட்டைக் காக்கின்ற பண்பும் உண்டு.


தமிழகமுதல்வர் கலைஞர் தலைமையேற்றார்
சட்டமன்றத்தலைவர் புலவர் கோவிந்தன்