புதியதொரு விதிசெய்வோம் | 147 |
களைத்திருந்த புலவனுக்கு முன்னே நின்று கவரியினால் மெல்லனவே வீசி, நெஞ்சம் களித்திருந்த மேலவனைப், புலவர்ப் போற்றும் காவலனை, முடியரசில் அன்று கண்டோம்; இளைத்திருக்கும் தமிழ்த்தாயின் வாட்டம் நீங்க, இனியதமிழ்ப் புலவர்சிலை கடலின் ஒரம் நிலைத்திருக்க ஆழிஅலைக் கையால் வீச, நிற்பதைநாம் தமிழரசில் இன்று கண்டோம், படைவலியால் வடபுலத்தை அன்றை வேந்தர் பகையாக்கிப் பணிவித்தார் இன்றோ பேச்சு நடைவலியால் நட்பாக்கிப் பணிய வைக்கும் நாவன்மை கொண்டிலங்கக் காணு கின்றோம்; குடையுடைய மூவேந்தர் வீரம் ஒன்றே குறியாக மறங்காட்டி வந்தார் அந்நாள்; நடையுடைய நாவேந்தர், கொள்கை ஒன்றே நடுவாகத் திறங்காட்டி வந்தார் இந்நாள், மாரிவளங் குன்றியக்கால் வான்பேர் அச்சம், மக்களுக்கோர் இன்னல்வரின் பெரும்பேர் அச்சம், பாரிதனைக் காக்கின்ற குடிப்பி றத்தல் படுதுயரம் எனநினைந்து காத்தார் அன்று; மாறியது பருவமழை, அதனால் எங்கும் வறட்சிநிலை பரவியது கண்டு நெஞ்சில் ஊறிவரும் பரிவுடனே ஓடி ஓடி உறுதுயரம் துடைப்பதற்கு முனைந்தார் இன்று. |