பக்கம் எண் :

148கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

முன்னாளில் தமிழ்நாடு பொதுமை யின்றி
      முடியரசாய்த் தனியரசாய் விளங்கக் கண்டோம்;
இந்நாளில் குடியரசாய் மலர்ந்த தேனும்
      எடுப்பார்கைப் பிள்ளையென நிற்கக் கண்டோம்;
தன்னாட்சி செய்கின்ற உரிமை யின்றித்,
      தாவென்று நடுவரசைக் கேட்டுவாங்க
அன்னார்பின் திரிகின்ற நிலையே கண்டோம்;
      அதிகாரம் இல்லாத அரசே பெற்றோம்.

நடுவரசில் அதிகாரம் குவிந்த போதும்
      நாகரிக அரசியலைச் சொல்லிக் காட்டிக்
கொடுவரிமை என்றுரத்த குரல்கொ டுக்கும்;
      கூடிமகிழ் உறவுக்கும் கைகொ டுக்கும்;
கெடுதலையாய்ப் போராடும் உள்ளம் இல்i;
      கிளந்துரைத்து வாதாடும் நெஞ்சம் உண்டு;
விடுதலைக்குக் கேடுசெய்ய பகைகள் வந்தால்
      வீறுடனே சீறிஎழும் நாடு காக்கும்.

எளியரென வலியரென இன்னும் இங்கே
      இருக்கின்ற நிலையொழிக்கும் பணியில் நிற்கும்;
துளியளவும் வன்முறையை நாட லின்றித்
      தோழமையால் பொதுவுடைமை பூக்கச் செய்யும்;
இழிவுடைய உயர்வுடைய சாதி என்னும்
      இறுமாப்புக் கொள்கைகளைச் சுட்டெ ரிக்கும்;
தெளிவுடைய அறிவினராய் மாந்தர் எல்லாம்
      திருவினராய்ச் சரிநிகராய் வாழச் செய்யும்