பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 151

21. ஒற்றுமையும் ஒருமையும்

ஒற்றுமை எனவும் ஒருமை எனவும்
சொற்றிடும் இருசொலைச் சற்றிவண் நோக்குதும்
வேறுபடு பொருள்களைக் கூறிடும் அவற்றுள்
சாரும் பொருண்மை *தேறுதல் நம்கடன்
ஒன்றுடன் மற்றொன் றிணைவதே ஒற்றுமை
ஒன்றினுள் ஒன்று மறைவதே ஒருமை;
இணைந்தும் தனித்தும் இயங்குவ தொற்றுமை
அணைந்தபின் ஒன்றாய் அமைவதே ஒருமை;
மலைப்பினி வேண்டா மனத்தினிற் பொருந்த
இலக்கணச் சொல்லால் விளக்குதும் கேண்மின்;
பலபல எனுஞ்சொல் பகுக்கவும் இயலும்
கலகல எனுஞ்சொல் கலந்தே நிற்கும்;
முன்னதை அடுக்குத் தொடரென மொழிவர்
பின்னதை இரட்டைக் கிளவியென் றியம்புவர்;
அடுக்குத் தொடரென ஆகுவ தொற்றுமை
இரட்டைக் கிளவியென் றிருப்பதே ஒருமை;
இடர்ப்படல் தவிர்த்தினி இருவகைப் பொருளும்
மனத்தினில் தெளிகநும் மயக்கமும் விடுத்தே.

1.1.1977


* 1. தேறுதல் - தெளிதல்.