பக்கம் எண் :

152கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

22. ஒற்றுமை உருப்படுமா?

வளமனை பலவும் வருபொருட் டொகையும்
உளநல் முதியோன் ஒருவன்; அவற்குக்
கற்றறி மக்கள் காளையர் நால்வர்
உற்றனர் மணம்பெறத் தக்கநற் பருவம்;
மகட்கொடை வேண்டி மருகும் நாளில்
நகத்தகும் நண்பன் நவின்றனன் சிலசொல்;
‘நால்வரும் தனித்தனி நங்கையர் மணப்பின்
பாழ்படும் ஒற்றுமை; பழுதுறும் அமைதி;
வருத்தமும் குழப்பமும் வந்துனைச் சூழும்;
ஒருத்தியைக் கொணரின் ஒற்றுமை வாழும்;
பெண்டிர் நால்வர் சண்டைகள் இடுவர்
மண்டைகள் உடைபடும் அண்டையர் நகைப்பர்;
பலமொழி பேசும் பலப்பல மாநிலம்
நலமுற ஒற்றுமை நிலவுறச் சான்றோர்
ஒருமொழி கொணர்தலை உற்று நோக்குதி!
அறிவிலாச் செயலா அவரெலாம் செய்வர்?
அதனால் நீயும் அரிவை ஒருத்தியை
மதலை நால்வர்க்கும் மணமுடிப் பாயே!

2.7.1979