160 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
செந்தமிழிற் சுவைகூட்டும் மொழிகள் பேசும் தீங்குயிலே நானுனக்குத் தெய்வ மென்றால் சிந்தையினை ஆண்டுகொண்ட நீயே எற்குத் தெய்வமெனச் சொல்வதலால் வேறு காணேன்; இந்தவகை அன்பதனால் பிணைந்து நின்றால் இல்லறந்தான் பேரின்பம்; இதனைவிட்டு நொந்துழன்று திரிகின்றார் உலக மாந்தர்; நுண்மதியே! என்னுயிரே! வாழ்க என்றேன் ‘வணங்குமெனை வாழ்த்திவிட்டீர்; மற்றெ னக்கு வரமெங்கே? பரிசிலெங்கே? எனந கைத்தாள்; நுணங்கிடையே எனைவணங்கி நிற்கும் பாவாய் நொடிப்பொழுதும் பரிசில்தரத் தயங்க கில்லேன் மணங்கமழும் மலர்முகத்துச் சிறுவன் நின்றான் மதிமுகத்தை மாறாமல் நோக்கு கின்றான் கணங்கணமாத் தரவிருப்பம் ஆனால் அந்தக் கள்வன்நமை விடுவானோ கண்ணே என்றேன். “பொங்கலுக்குத் தரும் பரிசா? நன்று! நன்று! போங்களத்தான் இப்பொழுது சொன்ன தெல்லாம் எங்களுக்கு வேண்டாவென் றோடி விட்டாள்; இருநிலத்தை மெழுகிஅதிற் கோல மிட்டு மங்கலநாள் தொழுதங்கே அடுப்பு மூட்டி மஞ்சளிலை தொடுத்தபுதுப் பானை ஏற்றிப் பொங்கிவரப் பாலூற்றி முனைகள் தேயாப் புத்தரிசி பச்சரிசி உலையி லிட்டு முந்திரியின் பருப்பிட்டுக் கொடியில் காய்த்த முதிர்கனியின் உணங்கலுடன் வெல்லங் கூட்டி உந்திஅது பொங்கிவரப் பொங்க லிட்டாள்; உளக்களிப்பால் பொங்கலோ பொங்க லென்று |