பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 161

செந்துவர்வாய்க் குரலெழுப்பிச் சங்கம் ஆர்த்துச்
      செவ்வாழை யிலைவிரித்துப் படைத்த தன்மேல்
வெந்துருகும் நெய்யூற்றி உண்ண உண்ண
      வேண்டும்வரை பரிமாறி மகிழ்ந்து நின்றாள்.

மனைக்கினிய மங்கையவள் பொங்கி வைத்து
      மனமுவந்து பரிமாற நான் சுவைத்துத்
தினற்கினிது தினற்கினிதென் றுண்டே னாகத்
      தெரிவைமுகத் திதழ்சிறிது மலரக் கண்டேன்;
எனைத்திடர்கள் உற்றாலும் தனது ழைப்பை,
      இனியதொரு தன்படைப்பைப் பிறர்பு கழ்ந்தால்
மனத்துயரம் மாறிவிடும் மகிழ்வு தோன்றும்
      மாநிலத்தின் இயற்கையிது வெனவு ணர்ந்தேன்

உறவினர்க்கும் உழைக்கின்ற தொழில்வல் லார்க்கும்
      உற்றவர்க்கும் மற்றவர்க்கும் பகிர்ந்து பொங்கல்
உறவளித்தோம் மகிழ்ந்தளித்தோம்; பின்னர் அந்த
      ஒண்டொடியை அருகழைத்தேன்; யாழெ டுத்து
நறவெனக்கிங் கூட்டுதற்கு மீட்டு கென்றேன்;
      நங்கையவள் யாழெடுத்தங் கமர்ந்தாள் என்முன்
நிறம்வெளுத்த தாமரையாள் உருவைச் சான்றோர்
      நிகழ்த்தியநற் கற்பனையை நேரிற் கண்டேன்

இடப்புறத்தே யாழ்சாய்த்துத் தாங்குங் காட்சி
      எழிலைத்தான் என்னென்பேன்; விரைந்து சென்று
இடக்கையின் விரல்நான்கும் நடனம் ஆடி
      ஏழிசையின் வகைமிழற்றும் திறந்தான் என்னே!
படக்கிடந்த யாழ்நரம்பைத் தெறிப்ப தற்குப்
      படரும்வலக் கைவிரலின் நளினம் என்னே!
தொடக்கிடுமவ் விசைக்கேற்ப அவள்மு கத்தில்
      தோன்றிவரும் மெய்ப்பாட்டின் வகைதான் என்னே!