பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 163

மனங்குளிர மேல்நடுகீழ் எனவு ரைக்கும்
      வழிமுறையால் இன்னிசையை இசைத்துப் பின்னர்
*அனங்கவிழும் நடையுடையாள் பொருள்வி ளங்கா
      அயன்மொழியின் இசைப்பாடல் ஒன்றெ டுத்துத்
தனந்தனந்தோம் தகிடவென முழங்கிக் கைகள்
      தாளமிடப் பாடினள்காண்; கேட்டு நெஞ்சம்
சினங்கெழும முகஞ்சிவந்து கைகள் கொண்டு
      செவியடைத்தேன் உளந்துடித்தேன் நிறுத்து கென்றேன்.

நிறுத்தென்று நான் சொல்லி நிறுத்து முன்னே
      நின்றதவள் வாய்ப்பாட்டு; பேதைப் பெண்ணே
பொறுத்திருக்கும் பண்பினுக்குத் தமிழ னைப்போல்
      பூமிதனில் யாங்கணுமே கண்ட தில்லை;
சுறுக்கென்று சொல்வதெனில் மானம் விட்டோர்
      சூடுகெட்டோர் நமைப்போல யாண்டும் இல்லை;
கிறுக்கரெனத் தொழும்பரென அறிவு கெட்டுக்
      கீழாகிப் பாழாகித் திரிகின் றோமே!

பாடுகின்ற நீதமிழ்ப்பெண் பாடல் கேட்கும்
      பாவியும்நான் தமிழ்மகனே; ஆனால் இங்குப்
பாடுகின்ற பாமட்டும் தமிழே யில்லை;
      பாரெங்கும இக்கொடுமை கண்ட தில்லை;
நாடுகின்ற இசையரங்கில் பிறவ ரங்கில்
      நன்மைமிகும் வானொலியில் கொடுமை செய்யும்
வேடுவர்கள் தமிழுக்குத் தீங்கு செய்யும்
      வினைகாணும் பொழுதெல்லாம் நெஞ்சம் வேகும்


* அனங்கவிழும் - அன்னங்கவிழும்