பக்கம் எண் :

164கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

நல்லவரும் சான்றோரும் சொல்லிச் சொல்லி
      நாடோறுங் கதறினுமே கேட்பா ரில்லை;
புல்லடிமைத் தொழில்செய்தே பழகி விட்டோம்;
      புரியாத மொழிகேட்டு மழுங்கி விட்டோம்;
கொல்லரவு நச்சுமிழ்தல் போல நீயும்
      கொடுமொழியால் இசைபாடி எனைவ தைத்தாய்
அல்லலுறச் செய்துவிட்டாய் பொங்கல் நன்னாள்
      அகமகிழ்வைக் கெடுத்துவிட்டாய் எவரை நோவேன்?

பழுத்தெழுந்த சினத்தைஎலாம் கொட்டி விட்டேன்;
      பாவையவள் துடிதுடித்தே ‘உங்கட் கென்ன?
புழுக்கலிலாப் பச்சரிசி வேண்டு மென்றேன்
      புழுக்களுள பச்சைநிற அரிசி தந்து
முழக்குகிறீர்; உலையிட்டுப் பொங்க வைத்தால்
      மும்மடங்கு பொங்கிவரும் சீற்றம்’ என்றாள்
முழங்கையில் தலைவைத்துத் துயி;லும் என்னை
      முழக்கிற்றுப் பாவைகுரல் விழித்தெ ழுந்தேன்.

கனவகத்தும் பெருங்கவலை; நனவ கத்தும்
      கரைகாணாக் கவலைகளே சூழும் வண்ணம்
வினைவிளைக்கும் கொடியவரைக், கொள்ளை கொள்ள
      வேளைதொறும் வஞ்சகங்கள் செய்து கொண்டு
தினவெடுத்துத் திரிபவரை ஒழிக்கும் நாள்தான்
      திருநாளாம் எனவுரைத்தேன்; அவள்ந கைத்து,
“முனமெழுந்து நீராடி வருக” என்றாள்;
      மொய்குழலின் ஆணைதனை ஏற்றுக் கொண்டேன்.

அரசினர் பயிற்சிக் கல்லூரி,
புதுக்கோட்டை, 21.1.1967