புதியதொரு விதிசெய்வோம் | 165 |
29. தீப்பொறி தோற்றத்தால் முதல்மாந்தன், தொல்லுலகில் முதன்மொழியைத் தோற்று வித்த ஏற்றத்தால் முதல்மாந்தன், ஈடில்லா நாகரிக இயல்பு காட்டும் ஊற்றத்தால் முதல்மாந்தன், உயர்மறத்தைப் போர்க்களத்தில் உணர்த்தி நிற்கும் சீற்றத்தால் முதல்மாந்தன், சீர்மிகுத்து வாழ்ந்தவன்றான் சிதறிக் கெட்டான். சாதிதரும் பிரிவுகளைச் சமயத்தின் பொய்மைகளைச் சடங்கு தம்மை ஒதிவருஞ் சழக்கர்களை ஓராது நம்பியதால் உணர்வி ழந்தான்; பாதிமதி உடையவனாய்ப் பாழ்பட்ட வாழ்வினனாய்ப் பான்மை கெட்டான் மேதினியின் மேல்மகன்றான் மேவலராற் கீழ்மகனாய் வீழ்ந்து விட்டான் வீழ்ந்தவனை மேலுயர்த்த வீறுபெறும் வாழ்வுதர விழைந்து, தீமை போழ்ந்தெறியப் பாட்டுலகிற் புகுந்திருக்கும் புரட்சிமனப் பொன்னுச் சாமி சூழ்ந்தெழுதும் ஒவ்வொன்றும் சுடுகின்ற தீப்பொறிதான்; சொல்லும் பாடல் தாழ்ந்தவரை உயர்த்திடுக தன்மானம் வளர்த்திடுக தழைத்து வாழ்க 5-1-1984
மலேசியக் கவிஞர் பொன்னுசாமியின் ‘தீப்பொறி’ என்ற கவிதைத் தொகுப்பு நூலுக்கு எழுதிய வாழ்த்து |