பக்கம் எண் :

166கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

30. நீர்ப்பானை ஓட்டையானால்...?

சாதிக்குச் சாதியிங்கு மோதிக் கொண்
      டழிகின்றசேதி யுண்டு
வீதிக்கு வீதியிங்குப் போதிக்கும்
      பள்ளிக்குஞ் சாதி யுண்டு
வாதிக்க வாயில்லை, வாழ்விக்க
      வழியில்லை, வாழ்ந்த நம்மைப்
பாதிக்கும் நிலையுண்டு பாழ்பட்ட
      பிரிவுண்டு பாராய் தம்பி!

பார்ப்பானைத் திட்டுகிறாய் பாடுபல
      படுகின்றாய் பயன்தான் உண்டா?
சேர்ப்பாரை ஒன்றாகச் சேர்க்காமல்
      செயன்முறையிற் செய்து காட்ட
ஏற்பாடு செய்யாமல் எத்தனைதான்
      முயன்றாலும் என்ன கண்டாய்?
நீர்ப்பானை ஒட்டையடா! நிரப்புகிறாய்
      தண்ணீரை, நிறைதல் உண்டோ?

ஒன்றாக நாமிணைந்தால் ஊறுசெயும்
      பகைமையெலாம் ஒழிந்தே போகும்;
நன்றாக எண்ணிப்பார்; நாலாயி
      ரஞ்சாதி நமக்குள் வைத்தோம்
*ஒன்றாரும் புகுந்துவிட ஓட்டைகளை
      அமைத்துவிட்டோம்; உட்பு குந்தோர்
வென்றாள வழிசமைத்தோம்; வெறுங் கூச்சல்
      போடுகிறோம்; விடியல் காணோம்.


* ஒன்றார் -பகைவர்