168 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
31. விண்வெளிப் போருக்கா விஞ்ஞானம்? அணுவைப் பிளந்திடும் ஆற்றலைப் பெற்றனன் ஆறறி வேந்திய மாந்தனென்றார்- ஆய்வில் நுணுகிப் புகுந்திடும் நூலறி வாளனை நூறு வகைப்பட வாழ்த்தி நின்றேன். பாருக்கு நல்லன வாய்த்திடு மேயெனப் பச்சை மனத்தினுள் நச்சிநின்றேன்-அமைதி வேருக்குள் பாய்ச்சினன் காய்ச்சிய நீரினை வெந்து தளர்ந்துளம் மாழ்கிநின்றேன் யாருக்கும் யாவையும் வாய்த்திடு மேயென யானொரு கற்பனை செய்து கொண்டேன்-விண்ணில் போருக்கு வல்லவன் யாரெனப் பார்த்திடப் போர்ப்பறை கொட்டினன் கேட்டுநொந்தேன் ஆடவர் அஞ்சிட மாதரும் அஞ்சிட ஆங்கிளஞ் சேய்களும் அஞ்சிநின்றார்-எந்த நாடரும் அஞ்சிட நாய்வெறி கொண்டதால் நாளெலாம் அஞ்சியே வாடுகின்றார் மண்ணுங் கெடுத்தனர் விண்ணுங் கெடுத்தனர் வாரியின் நீருங் கெடுத்தனரே -தீய எண்ணம் உடுத்தவர் என்னென்ன கேடுகள் ஈங்கினும் செய்யப் படித்தனரோ? |