பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 169

விண்வெளிப் போருக்கோ விஞ்ஞானங் கற்றனர்
      வேதனை நெஞ்சினில் விஞ்சுதடா-மக்கள்
பண்ணிய குண்டுகள் மக்களை மாய்த்திடப்
      பாரதைக் கண்டு பொறுத்திடுமோ?

மக்களைக் கொன்றபின் மாநிலம் ஏதடா?
      மாமதி யொன்றை மறந்தனரோ?-நம்மைக்
கொக்கென எண்ணினர்; கொக்கரிப் போர்தமைக்
      கூடி யெதிர்த்தல்நம் வேலையடா!

உலகிற் பிறந்தவர் ஒவ்வொரு மாந்தரும்
      உரிமை படைத்தவர் உண்மையிதாம்-இங்குக்
கலகம் விளைத்திடின் காய்ந்து தடுத்திடக்
      கையை உயர்த்துதல் வேண்டுமடா

உண்மையிற் போர்வெறி ஓட்டிட யாவரும்
      ஒன்று திரளுதல் வேண்டுமடா-இந்த
எண்ணம் மிகுந்தவர் எம்மவர்தோழரென்
      றெண்ணி நடந்திட வேண்டுமடா,

20-5-1987