புதியதொரு விதிசெய்வோம் | 171 |
33. தேர்தல் நினைவு இரவெனும் நங்கை வந்தாள் என்விழி துயிற்ற எண்ணிப் பிறையினிற் குளிரெ டுத்துப் பிச்சியில் மணமெ டுத்து வருமிளந் தென்றல் கொண்டு வீசினள்; வைய மெல்லாம் இருளிய பின்னும் என்றன் இமைகளோ இணைய வில்லை. தேர்தலை நினைந்து விட்டேன் சிந்தையும் உறங்க வில்லை; நேர்மையை அங்குக் காணேன் பொய்ம்மையே நெளியக் கண்டேன்; தேர்வரும் நாளைப் போலத் தெருவெலாம் கூச்சல் கேட்டேன் ஊர்வலம் பலவுங் கண்டேன் உண்மையே காண வில்லை. உண்மையே சிறிது மில்லார் ஊரினை ஆள வந்தால் கண்ணியம் நிலைப்ப தெங்கே? கயமைதான் ஓங்கி நிற்கும்; பெண்மையை விலைக்கு விற்போர் கற்பினைப் பேச வந்தால் மண்மிசை என்ன வாழும்? மதியுளர் நகைப்ப ரன்றோ? |