பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 173

34. விழா மட்டும் போதுமா?

நேற்றாண்ட மன்னவனை நினைவுறுத்தும்
      தோற்றத்தாய், நினக்கு நாட்டில்
நூற்றாண்டு விழாவென்றார் நுவலரிய
      மகிழ்வுற்றேன்; நுணுகிப் பார்த்தேன்
காற்றாண்ட திசையெல்லாம் கவிச்சுவையைப்
      பரப்பலன்றிக் கருத்திற் கொள்ளார்;
ஏற்றாண்டு நின்கருத்தை ஏனின்னும்
      செயற்படுத்தா திருக்கின் றாரோ?

பார்திருத்தப் பாடுபட்டாய் பகுத்தறிவை
      வளர்த்துவிட்டாய் பாவின் வேந்தே
சீர்திருத்தப் பாமொழிந்தாய் சீரழிந்து
      பாவுலகஞ் சிதைந்த தையா!
யார்திருத்தப் போகின்றார் யாப்புலகை?
      மயங்குகிறேன் யாது செய்வேன்?
ஓர்பொருத்தம் இல்லாத உரைநடையைப்
      பாடலென உரைக்கின் றாரே!

சரிந்துவிட்ட தமிழர்க்குத் தமிழியக்கம்
      எனும்நூலைத் தந்து சென்றாய்;
திருந்திவிட்ட தமிழரினிச் செயற்படுவர்
      என்றிருந்தேன் தெளிய வில்லை;
குருந்துவிட்ட மழலையர்க்கும் கொடுக்கின்றார்
      அயன்மொழியை; கொடுமை யன்றோ?
மருந்துவிட்டென் மனப்புண்ணை ஆற்றுவர்யார்?
      மானத்தை மறந்தே போனார்.