பக்கம் எண் :

176கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

சொல்லிலே தேனும் உண்டு;
      சுடர்விடு கனலும் உண்டு;
மெல்லவே தென்றல் பேசும்;
      மீறிய புயலும் வீசும்;
நல்லமென் குயிலும் கூவும்
      நடுவினிற் புலியும் பாயும்;
வல்லமை தமிழர்க் கிங்கே
      வழங்கிடும் உணர்ச்சிப் பாடல்.

தமிழ்மொழி தழைக்க வேண்டின்
      தமிழினம் நிமிர வேண்டின்
அமிழ்தெனப் பாட்டு வேந்தன்
      ஆக்கிய பாடல் முற்றும்
தமிழரின் நெஞ்ச மெல்லாம்
      தனியர சாட்சி செய்து
கமழ்ந்திட வேண்டு மிங்கே
      களிநடம் புரிய வேண்டும்

பாரதிப் புலவன் நூலைப்
      பரப்பிடப் பலரீங் குள்ளார்;
பாரதி தாசன் பேரைப்
      பகர்ந்திடச் சிலரே உள்ளார்;
ஊரவர் நன்றி யில்லார்
      ஒருதமிழ் மகனைப் போற்றும்
சீரறி யாத மாந்தர்
      செந்தமிழ் நாட்டில் உள்ளார்.

இத்தகு நினைவால் எங்கள்
      எழிற்கவி வேந்த னுக்கு
முத்தமிழ் மன்றங் காண்க;
      முன்னவன் புகழ்ப ரப்ப
மெத்தவும் முயல்க; அந்த
      மேலவன் கருத்தும் பாட்டும்
இத்தரை முழுதுஞ் செல்க;
      எழுச்சியைப் பரப்பி வெல்க..