பக்கம் எண் :

178கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

கண்மூடி வழக்கமெனுங் காட்டில் தோன்றுங்
      கதைக்குதவாச் சாதிமதம் அடிவே ரற்றும்
எண்கோடிப் பழங்கொள்கைச் சருகு சுள்ளி
      இழிவுதரும் அடிமையெனும் வெம்பல் வீழ்ந்தும்
மண்மூடிப் போகவெனச் சாடி வந்த
      மாவலிமைப் பெரும்புயலே இடிமு ழக்கப்
பண்பாடி அணிதிகழும் பாவால் மின்னிப்
      பழத்தசுவை பொழிமுகிலே யாண்டுச் சென்றாய்?

எவ்விடத்தும் எப்பொழுதும் எவரி டத்தும்
      எதுவரினும் உண்மையினை எடுத்து ரைக்கும்
செவ்வியநற் பெருமிதமும் அஞ்சா நெஞ்சும்
      சேராரை நடுக்குறுத்துஞ் சீர்த்த நோக்கும்
கவ்வுமெழிற் றிண்டோளும் விரிந்த மார்பும்
      களிறனைய பெருநடையுங் கொண்ட சிங்கம்
இவ்வுலகில் எங்கள்மனக் குகையில் வாழும்
      எழுந்தெழுந்து முழங்கிவரும் எந்த நாளும்

இருட்புலத்திற் கவியுலகம் மூழ்குங் காலை
      எழுவெள்ளி பாரதியாய் வந்த திங்கே
மருட்புலத்தை மாய்க்கின்ற ஞாயி றாக
      மன்னவனே நீவந்தாய் அவன்பேர் சொல்ல;
உருப்பெற்ற கதிர்களென எம்மைப் போல்வார்
      உள்ளனரே ஆயிரவர் நின்பேர் சொல்ல;
செருக்குற்றே மொழிகின்றேன் ஐயமில்லை
      சிந்தையுளே நீயிருக்க எனக்கேன் அச்சம்?