பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 179

வாழ்நாளிற் கவிஞனுக்கு வாழ்வே யில்லை
      வையத்துக் குறையென்றே சொல்வர்; அந்தத்
தாழ்வுரையைப் பெருங்குறையை மாற்றி விட்ட
      தகவுனக்கே தலைநகரில் வாய்த்த தையா!
வீழ்நாளின் பிறகடையும் பெருமை யெல்லாம்
      விழியெதிரே கண்டுவந்தாய் வெள்ளம் போல
ஆழ்கடலின் கரையருகே தமிழர் கூட்டம்
      ஆர்ப்புடனே விழவயர்ந்து களிக்கக் கண்டாய்.

இல்லறத்தைப் பல்கலையின் கழக மாக்க
      ஈடில்லாக் குடும்பவிளக் கேற்றி வைத்தாய்
சொல்லடுத்த தமிழ்வளர்க்கத் தமிழர்க் கெல்லாம்
      தூய்மைமிகு தமிழியக்கஞ் சொல்லி வைத்தாய்
புல்லிதழ்த்தேன் மலர்முதலா இயற்கை யூடு
      பொருந்தழகின் சிரிப்பெல்லாந் திரட்டித் தந்தாய்
சொல்லிருக்கும் பொருளிருக்கும் அணியி ருக்கும்
      சொற்றமிழில் பாண்டியனின் பரிச ளித்தாய்.

நறுந்தேனும் பசுப்பாலுங் கலந்து வைத்து
      நற்கனியாம் முக்கனியை நறுக்கி யிட்ட
விருந்தாகும் நீதந்த கவிதை; மேலும்
      விசையொடிந்த உடலகத்தில் வீரஞ் சேர்க்கும்;
பொருந்தாரைச் செவிசாய்த்துப் பொருந்த வைக்கும்;
      புலவோய்நின் நறுங்கவிதைக் கவிகள் சாவா
மருந்தாகும்; செந்தமிழுக் குயிர்ப்பு நல்கும்;
      வையத்துள் என்றென்றும் வாழும் ஐயா