பக்கம் எண் :

180கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

எம்பாட்டன் பாரதிக்குத் தாச னானாய்
      எம்மனைய கவிவாணர்க் கரச னானாய்
நம்மாட்சி யவைப்புலவன் நீயே யாகும்
      நாள்விரைவி லுண்டென்று நம்பி நின்றோம்
எம்பாட்டில் அவலத்தைச் சேர்த்து விட்டாய்
      இரங்குகின்றோம் கண்ணீரைச் சொரிந்து நின்றோம்
தெம்பூட்டித் தமிழ்காக்க வழிகள் காட்டு,
      திறமூட்டு கைநீட்டித் தொழுது நின்றோம்

பாரதிக்குத் தாசனெனப் பாரு ரைக்கும்
      பாவலனே கவிக்குலத்துத் தலைவ ரேறே
யாருரைக்க வல்லார்நீ யிறந்தா யென்றே
      யாமொவ்வோம்; பாரதியும் இளங்கோ கம்பன்
பேரறிஞன் வள்ளுவனும் இறந்தா போனார்?
      பெருமையொடு வாழ்கின்றார்; அவர்போல் நீயும்
பாருலகில் வாழ்கின்றாய் ஐயா எங்கள்
      பாடலுக்கும் உயிரூட்டு வழியுங் காட்டு.