பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 181

37. இன்பம் எது?

இவ்வுலகில் மக்களினம் விழைவ தெல்லாம்
      இன்பமெனும் ஒன்றன்றி மற்றொன் றில்லை;
எவ்வுயிரும் இன்பினைத்தான் தேடித் தேடி
      இளைத்தலுக்கக் காண்கின்றோம்; துன்பம் என்றால்
ஒவ்வுவதிங் கொன்றில்லை; முனிவர் தாமும்
      ஓய்வின்றித் தவங்கிடந்து முயல்வ தெல்லாம்
அவ்வுலக இன்பத்தைப் பெறுதற் கென்றால்
      அதன்பெருமை சொலற் கெளிதோ? அரிதே யன்றோ?

உலகியலின் உண்மைநிலை உணரா மாந்தர்
      ஒப்பரிய இன்பந்தான் வாழ்க்கை என்பர்;
விலகரிய துன்பமுடன் கலந்த தைத்தான்
      வியனுலக வாழ்க்கைஎனச் சான்றோர் சொல்வர்;
நிலவிவரும் இடரனைத்தும் நின்று தாங்கி
      நிலைகலங்கா நெஞ்சுரத்தால் முயன்று, வெற்றி
குலவிவர வாழ்வது இன்ப மாகும்
      குறள்தந்த பெருமைமிகு நெறியும் ஆகும்.

வாழ்க்கையினை ஆறென்றால், நெறிப்ப டுத்தும்
      வரம்பாகும் இருகரையாம் இன்ப துன்பம்
வாழ்க்கையினைச் சகடென்றால் இயங்கச் செய்யும்
      வட்டமெனும் ஈருருளை அவ்வி ரண்டாம்;
வாழ்க்கையினை நாளென்றால் முழுமை செய்ய
      வருபகலும் இரவுமென அவற்றைச் சொல்வோம்;
வாழ்க்கையினில் இவ்விரண்டும் உண்டென் றெண்ணி
      வகைதெரிந்து நடப்பவர்க்கே இன்பந் தோன்றும்.