182 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
ஏர்நடத்தி, விதைவிதைத்து, நாற்றுப் பாவி எருவிட்டுக், களையெடுத்து நாளும் நாளும் நீர்கொடுத்துக் காத்திருந்து பாடு பட்டோன் நெடுந்துன்பம் உறக்கண்டான்; அதனால் இந்தப் பார்நடக்க உணவளித்து வள்ள லாகிப் பசிகளைந்து வாழ்கின்ற இன்பங் கண்டான் கூர்படைத்த அறிவாளர் பட்ட துன்பம் கொடுத்தவையே நாம்நுகரும் இன்ப மெல்லாம். குறுமலர்க்கண் சிறுமகனைக் கொஞ்சும் தாய்க்குக் கூடிவரும் இன்பத்திற் களவே இல்லை; கருவுயிர்க்கும் போதவள்தான் அடையும் துன்பம் கணக்குண்டோ? பகலுக்கு வெம்மை என்றால் இரவினுக்குத் தண்மையன்றோ? உலகில் என்றும் இருகூறும் கலந்திருக்கும்; ஒன்றில் ஒன்றாம் உறுதுயர்க்கு மறுபுறமே இன்ப மாகும் உற்றறிவார் தமக்கேஇவ் வுண்மை தோன்றும். இன்பமெது வெனவுணர்ந்து தெளிந்து சொல்ல எவராலும் இயலாது; போதும் போதும் என்பதிலே காண்கின்றான் ஒருவன் இன்பம்; எனைத்துநிதி பெற்றாலும் போதா தென்றே தன்பெருவாய் திறந்தலைந்து பொருளைத் தேடித் தவிப்பதிலே மற்றொருவன் இன்பங் காண்பான்; மன்பதையின் மனத்தளவே ஆகும் அல்லாள் மதிப்பிட்டுச் சொல்லுதற்கோர் வகையே இல்லை. ஒருவனுக்கிங் கின்பமெனத் தோன்றும் ஒன்றே உறுதுன்ப மெனத்தோன்றும் மற்ற வர்க்கே; ஒருநிலத்தில் இன்பமெனக் கொண்ட ஒன்றை ஒதுக்கிடுவர் மறுபுலத்தில் துன்பம் என்றே; பெருவிருப்பால் இஃதொன்றே இன்பமென்பார் பிழையென்று மற்றொருவர் பிறிது சொல்வார்; ஒருவருக்கும் புரியாத பொருளே யாகி உலகிலது சுழன்றுவரக் காணு கின்றோம். |