பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 183

தீப்பிழம்பின் உருண்டைஎனக் கிளர்ந்தெ ழுந்து
      திரைகடலில் முகங்காட்டுங் கதிரோன், மாற்றார்
நாப்பொழிந்த இகழ்வுரையால் சினந்தெ ழுந்து
      நண்ணாரைப் புறங்கண்ட போர்க்க ளம்போல்
மீப்படர்ந்த மேற்றிசையின் செக்கர் வானம்,
      மெல்லியலார் முகம்போலப் பொலிந்து விண்மீன்
நாப்பண்வரும் வெண்மதியம், அதைத் தொடர்ந்து
      நண்ணிவரும் முகிலினங்கள் காட்சி யின்பம்.

மலருமெழில் வண்ணமலர் கண்ணுக் கின்பம்;
      மருவிவரும் தென்றல்நலம் உடலுக் கின்பம்;
பலமலருள் விரிந்தமணம் மூக்கிற் கின்பம்;
      பாடிவரும் வண்டொலியோ காதுக் கின்பம்;
நலமருவும் நறுங்கனிகள் நாவிற் கின்பம்;
      நானிலத்துத் தோன்றுபொருள் அனைத்து மிங்குப்
புலனைந்தும் நுகரவரும் இன்ப மன்றோ?
      பொருந்துசுவை நுகருங்கால் அளவு வேண்டும்.

இரவுபகல் எனநோக்கா துழைத்துச் செல்வம்
      ஈட்டிமிகத் தொகுப்பதிலே இன்பங் காண்பர்;
வரவுவரும் தொகைபலவாய் மிகுதல் கண்டு
      வகுத்ததனை ஈவதிலே இன்பங்காண்பர்;
கரவுமனங் கொண்டொன்றும் நுகரா தெண்ணிக்
      கணக்கிட்டே பொழுதெல்லாம் இன்பங் காண்பர்;
உரமுடைய நன்மனத்தர் ஈந்து நின்றே
      உறுவறுமைத் துயர்வரினும் இன்பங் காண்பர்;

அளிப்பதிலே சிலர்க்கின்பம்; மற்றோர் வாழ்வை
      அழிப்பதிலே சிலர்க்கின்பம்; நாடுவாழ
உழைப்பதிலே சிலர்க்கின்பம்; வஞ்ச கத்தால்
      ஊரவர்தம் உழைப்பாலே உடல்வ ளர்த்துப்