20 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
6. சாவுக்கும் அஞ்சோம் மணம்பரப்பும் பூங்காவுள் கள்ளிக் கூட்டம் வளரவிடப் பார்த்ததுண்டோ? வாழைத் தோப்பில் கணங்கணமாய் மந்திபடை எடுத்து வந்தால் களிப்போடு வரவுரைக்கக் கண்ட துண்டோ? உணவளிக்கும் நெல்வயலுள் உதவாக் காளான் உறுகளைகள் படருவதை விடுவ துண்டோ? இணையில்லாத் தமிழ்வழங்கும் தமிழர் நாட்டில் இந்திமொழி புகவிடுதல் கண்டோம் கண்டோம்! அரியேறு பலகுழுமி வாழுங் காட்டில் அஞ்சிவரும் நரியாட்சி செலுத்தல் உண்டோ? விரிகுரலின் கோட்டானை அழைத்து வந்து விரும்புமிசைக் குயிலினத்தை ஆள்க என்று சுரிகைமுடி சூட்டுவதைக் கண்ட துண்டோ? தொன்னூல்கள் பலதொகுத்த பெட்ட கத்துள் சிறியதொரு கறையான்தான் ஆள்வ துண்டோ? செந்தமிழின் பேழைக்குள் இந்தி கண்டோம்! தூங்குகிற தமிழ்ப்புலியை இடறி வீழ்ந்த துணைவிழிகள் இல்லாதான் நிலைமை போல ஏங்குகிற வடவர்தமக் கொன்று சொல்வேன் என்னினத்தார் மொழிவெறியில் சளைத்தா ரல்லர்; வீங்குகிற தோளுக்கு விருந்து வைக்க விழைவீரேல் மொழிப்போரைத் தொடர்க; போரைத் தாங்குகிற வலிமையுண்டு வீரம் உண்டு சாவதற்கும் அஞ்சாத துணிவும் உண்டு |