24 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
8. இனி விடோம் உலகத்து முதன்மொழியாம் தமிழைத் தங்கள் உயிர்மூச்சாக் கொண்டிலங்கும் தமிழர் நாட்டிற் கலகத்தை உருவாக்கும் வெறியர் கூடிக் கடுகளவுந் தகுதியிலா இந்தி தன்னைப் பலகட்டுக் கதைகூறிப் புகுத லிட்டார் படையெடுத்தார், தடியெடுத்தார், பயனே யில்லை நிலை கெட்டோர் மூன்றுமுறை முயன்று பார்த்தும் நினைப்பொன்றும் பலிக்கவில்லை தோல்வி கண்டார்! முதன்முறையா இந்திமொழி தமிழர் நாட்டுள் முகங்காட்ட வன்முறையால் நுழைந்த போது கதவடைத்துத் தடுத்துரைத்தோம்; ஆள வந்த கடுங்கோலர் சிறைக்கதவைத் திறந்து வைத்தார்; அதன்கொடுமைக் கஞ்சவிலை புகுந்து நின்றோம்; அங்கேதான் ஈருயிரைப் பலியாத் தந்தோம்; இதன்பிறகே அந்தமொழி அஞ்சி ஓடி இடுப்பொடிந்து வடபுலத்தே கிடக்கக் கண்டோம். புறங்காட்டிச் சென்றமொழி மீண்டு மிங்குப் புகுவதற்குத் துணிவோடு வருதல் கண்டோம்; திறங்காட்டும் மறவர்குழாம் சாக வில்லை சிங்கமென இருக்கின்றோம் என்றெ ழுந்தோம்; அறங்காக்கும் மனமில்லா ஆட்சி யாளர் அடித்தடித்துத் துரத்திடினும் துணிந்து நின்றோம்; நிறங்காட்டுஞ் செங்குருதி சிந்தக் கண்டு நிலைகுலைந்து மறைந்தோடிச் சென்ற திந்தி. |